கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்ற கீரை என்பதால், இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் கிடைத்துள்ளது. இக்கீரையை தினசரி உணவில் எடுத்து கொண்டால் கண்ணாடி போடுவதற்கான அவசியமே ஏற்படாது. ஆனால் கீரை என்றதுமே சிலர் அலறி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் இந்த கீரையை விரும்பி சாப்பிடும் அளவிற்கு ருசியான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு எப்படி செய்வது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணி கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 50 கிராம்
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 1
வர மிளகாய் – 5
கடுகு – 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 கப்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அதே போல பாசிப்பருப்பையும் நன்றாக கழுவி பதினைந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து எடுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில்அரை கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி சீரகம், மூன்று வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து, பின் அதனோடு பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்த்து வேக விடவும்.
அதன்பின் கீரை நன்றாக வெந்து கொதித்ததும், அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து கிளறி, 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, கீரையில் கொட்டினால், சுலபமான முறையில் சுவையான கீரை கூட்டு தயார்.