மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா புயல் தாக்கியதால் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா என்ற மிகப்பெரிய சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதனால் ஹோண்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் கௌதமாலா ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஹோண்டுராஸ் நாட்டில் புயல் தாக்கியதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பல்வேறு நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 49 வீடுகள் உட்பட 140க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அதுமட்டுமன்றி 20க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுந்தன. அந்தக் கொடூர நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மாயமாகிய நிலையில், அவர்களை தேடும் பணி மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.