தமிழகத்தில் பள்ளிகள் திறக்கக்கூடாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது, அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
அதனால் பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்துக்களை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதிலும் நேற்று முன்தினம் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்துக் கணிப்பு கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்துக் கூறியுள்ளனர். அந்த கருத்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்” என்று தெரிவித்துள்ளது.