தலைமை ஆசிரியை ஒருவர் இலங்கை தமிழ் பிள்ளைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்காக தன் வாழ்க்கையையே சேவையாக அர்பணித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டினா(53). இவர் பல இலங்கை தமிழ் குழந்தைகள் உள்பட பல ஏழ்மையான மாணவ, மாணவிகளின் கல்விக்காக அயராது உழைத்து வருகின்றார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், “நான் 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்த போது, சில ஆண்டுகளாக எனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அப்போது நான் பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில் செல்வதற்கு கூட பணம் இல்லாமல் இருந்திருக்கிறேன்.
என் நிலைமையை உணர்ந்த பேருந்து நடத்துநர்கள் எனக்கு அவர்களுடைய பணத்தை கொடுத்து பயணசீட்டு தருவார்கள். இந்த உதவியை பார்த்த பிறகுதான் எனக்கு பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து கடந்த 2015ம் வருடம் கரூர் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வேலை பார்க்க ஆரம்பித்தேன். 2004ம் வருடம் ஏற்கனவே இந்த பள்ளிக்கு நான் ஆசிரியராக வந்துள்ளேன். அப்போது ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்காமல் விரட்டுவதை நான் கேள்விப்பட்டேன். இதையடுத்து அவர்களை கண்டுபிடித்து 13 பிள்ளைகளை எங்கள் பள்ளியில் தற்போது சேர்த்துள்ளேன்.
இதனால் என் கல்விப் பணிக்கு தடங்கலாக எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக திருமணம் பண்ணாமல் இருந்துவிட்டேன். அதனால் என் உறவினர்கள் இப்படி திருமணம் செய்யாமல் உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே என்று வருத்தமாக கேட்பார்கள். அவர்களிடம் நான் திருமணம் செய்திருந்தால் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுக்கு தான் தாயாக இருந்திருப்பேன். ஆனால் இப்பொழுது என் பள்ளியில் படிக்கிற 113 மாணவர்களுக்கும் நான் தான் தாய் என்று கூறுவேன்.
தலைமை ஆசிரியை கிறிஸ்டினா குறித்து நாடோடி மக்கள் குழு பிரதிநிதி ஜெயபால் அவர்கள் கூறுகையில், கிறிஸ்டினா எங்களுடைய மக்கள் கிட்ட கல்வியறிவை பற்றி தொடர்ந்து பேசி சம்மதிக்க வைத்து, எங்க குழந்தைகளை அவங்க பள்ளியில் சேர்த்து படிக்க அதேபோவைத்துள்ளார். மேலும் பள்ளிக்கு முடி வெட்டாமல் செல்லும் மாணவர்களுக்கு,பள்ளி முடிந்ததும் அவரே முடி வெட்டி விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.