இளம்பெண் ஒருவர் ஓடும் இரயிலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரயிலானது சிவ மெக்காவுக்கு புறப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று 10 மணி அளவில் சிவமெக்கா பழைய ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள தூங்கா ஆற்று பாலத்தில் மேல் இரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு இளம் பெண் ஒருவர் ஆற்றில் குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலில் உள்ள மற்ற பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளனர்.
ஆனாலும் இரயில் புது ரயில் நிலையத்தில் வந்து தான் நின்றுள்ளது. இதனால் இளம் பெண்ணின் தாய் அதிர்ச்சியில் கதறி அழுது ரயில்வே காவல் துறையினரிடம் சென்று கூறியுள்ளார். உடனே அவர்கள் தீயணைப்பு துறையினர், நீச்சல் வீரர்களுடன் சென்று இளம் பெண்ணை ஆற்றில் தேடும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மாலை 6 மணி வரை தொடர்ந்து தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை. மேலும் இரவு வெகு நேரமானதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளம்பெண் பெங்களூரை சேர்ந்த சஹானா(24). இவர் ஆடிட்டர் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வு எழுதுவதற்காக தன் தாய் சுஜாதாவுடன் ரயிலில் சிவமெக்கா வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் சுஜாதா இரயிலில் உள்ள பாத்ரூமிற்கு சென்றிருந்திருக்கிறார்.
அப்போது தான் அவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பதால் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.