நபர் ஒருவர் தங்கநகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரஞானம்பட்டியில் வசிப்பவர் சந்தியா. இவருக்கு ஒரு நாள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்பவரிடம் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் அவர் தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார். எனவே சந்தியா தன்னுடைய சகோதரன் ஜோதியின் செல்போன் எண்ணை டோனி மைக்கேலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து டோனி மைக்கேல் ஜோதியின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு 40 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகள் தங்களுக்கு பார்சல் அனுப்பியுள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜோதியின் செல்போனிற்கு பேசிய நபர் ஒருவர் லண்டனில் இருந்து பார்சல் வந்துள்ளதால் அதை வாங்குவதற்காக சுங்கவரியை கட்டினால் தான் வீட்டுக்கு பார்சல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே இதை நம்பிய ஜோதி 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியிருக்கிறார். இதையடுத்து பார்சல் எதுவும் தன் வீட்டிற்கு வராததால் ஏமாற்றம் அடைந்த ஜோதி மற்றும் அவருடைய சகோதரி சந்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பணம் மற்றும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.