கொரோனா பரிசோதனை குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒன்று கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றானது, உலகின் பல பகுதிகளில் வேகமாக பரவி பல இன்னல்களுக்கு மக்களை ஆளாகி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிய மனிதர்களை கண்டறிய நாள்தோறும் அனைத்து நாடுகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆனால் கொரோனா பரிசோதனையில் குளறுபடிகள் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில், ஒரே நாளில் தான் மேற்கொண்ட 4 கொரோனா பரிசோதனையில், இரண்டு முறை பாசிட்டிவ் என்றும், இரண்டு முறை நெகட்டிவ் என்றும் வந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
மேலும் கொரோனா பரிசோதனையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ஒரே கருவி, ஒரே மாதிரி சோதனை, ஒரே செவிலியர் இருப்பினும் பரிசோதனையில் குளறுபடி என்றும் தெரிவித்துள்ளார். தற்போது வரை கொரோனா அறிகுறிகளாக சளி மட்டும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் கொரோனா பரிசோதனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.