கணவர் ஒருவர் குடிபோதையில் தனது மனைவியின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – சுஜாதா. சுஜாதா அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய கணவர் குமரேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். எனவே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குமரேசன் குடிபோதையில் தனது மனைவி சுஜாதாவின் வீட்டிற்கு வந்து சுவர் ஏறி குதித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுஜாதாவின் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.
இதனால் ஏற்பட்ட தீ பக்கத்தில் இருந்த மற்ற இரண்டு வாகனங்களுக்கும் பரவி எல்லா வாகனங்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகி உள்ளன. இந்நிலையில் அவருடைய மனைவி சுஜாதா இச்சம்பவம் குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.