செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணுக்கு செல்போன் டார்ச் மூலம் பிரசவம் பார்த்த சம்பவம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரகி மாவட்டம் கொல்லூரு கிராமத்தில் வசிப்பவர் சித்தம்மா. இவர், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சித்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சித்தம்மா உடனடியாக கொல்லூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது கொல்லூரு கிராமப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த இன்வெட்டரும் பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகளை அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் யாரும் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் செவிலியரான நாகேஷ்வரி மட்டும் தான் அப்போது பணியில் இருந்துள்ளார். இதையடுத்து, அந்த செவிலியர் சித்தம்மாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்ததால், மருத்துவமனை ஊழியர்கள், தங்களுடைய செல்போன்களில் டார்ச் லைட்டை ஆன் செய்துள்ளனர். அந்த வெளிச்சத்தில் செவிலியர் சித்தம்மாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்நிலையில் சித்தம்மாவுக்கு அதிகாலையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் செல்போன் டார்ச் லைட் மூலமாக பிரசவம் பார்த்த செவிலியர் நாகேஷ்வரிக்கு கலபுரகி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குடும்ப நலத்துறை ராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.