தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது முடிந்த வர்களாக கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு வெளியிடுகிறார். அதில் வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
அதில் பெயர் சேர்க்க விருப்பம் கொண்டவர்கள், கருத்து தெரிவித்தவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அந்த விண்ணப்பங்களை வாக்குச் சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் அனைத்து வேலை நாட்களிலும் தரலாம். அதன்பிறகு ஜனவரி பதினைந்தாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.