சிறுமி ஒருவர் தீபாவளிக்கு புது ஆடை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவருக்கு அமுதா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று அமுதா தனது தந்தையிடம் புதிய ஆடை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் புத்தாடை வாங்க தன்னிடம் பணம் இல்லை என்பதால், பொங்கலுக்கு உடை வாங்கி தருவதாக தனது மகளிடம் குருசாமி கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமுதா கவலையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அமுதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அமுதாவை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.