இடையர் பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியில் ராஜன் மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிய நிலையில், குழந்தை எதுவும் இல்லை. சிந்துவுடன் அவரின் தாய் செல்வி (58) மற்றும் தம்பி இந்தியன் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிந்துவின் தாய் செல்வி தனது கணவர் இறந்து விட்டதால் இரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செல்வி உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை இல்லாமல் தங்களை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த தாய் திடீரென உயிரிழந்ததால் சிந்து மற்றும் அவரின் தம்பி இந்தியன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். தனது தாய் இல்லாமல் தங்களால் வாழ முடியாது என்று நினைத்த அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தம்பி இந்தியனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.