ஜோசியக்காரர் குழந்தை பிறக்காது என்பதால் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதை தாங்க முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த அஸ்வினி என்ற பெண் கடந்த வருடம் யுவராஜா என்பவரை காதலிப்பதாக கூறி பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் யுவராஜாவின் குடும்பத்தினர் ஜோசியர் ஒருவரை பார்க்க சென்றுள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஜோசியரை சந்தித்த பிறகு தலைகீழாக மாறியது.
அஸ்வினிக்கு குழந்தை பிறக்காது என ஜோசியர் கூறியதால் யுவராஜாவும் அவரது குடும்பத்தினரும் அஸ்வினியை துன்புறுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அஸ்வினி கடந்த 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அஸ்வினியின் பெற்றோர் கூறுகையில் “யுவராஜாவின் குடும்ப ஜோசியர் அஸ்வினிக்கு குழந்தை பிறக்காது என கூறியது முதல் அவளை யுவராஜா மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
கூடுதலாக நகை பணம் வரதட்சணையாக கேட்டு அஸ்வினியை கடுமையாக தாக்கியுள்ளனர். நவம்பர் 16ஆம் தேதி யுவராஜாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு புதிதாக மொபைல் போனும் பைக்கும் வாங்கி கொடுக்க கேட்பதாக எங்களிடம் அஸ்வினி கூறி இருந்தாள். நவம்பர் 13ஆம் தேதி கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு விட்டதாகவும் யுவராஜா தன்னை அடிப்பதாகவும் தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.
அடுத்த நாள் எங்கள் மகளை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக யுவராஜா கூறினார். நாங்கள் மருத்துவமனைக்கு சென்றபோது அஸ்வினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். ஆனால் அஸ்வினியின் உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தது. கொலையாக இருந்தாலும் தற்கொலையாக இருந்தாலும் அதற்கு முழு காரணம் யுவராஜாவும் அவரது குடும்பத்தினரும் தான்” என கூறியுள்ளனர். மேலும் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.