சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலையில் தினந்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் 13 மணிநேரம் தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் நான்கு மணி நேரம் மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அந்த பூஜை நேரங்களில் பக்தர் 18 படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும் அனுமதி கிடையாது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனத்தை அடுத்து கணபதி ஹோமம் நடைபெறும். அந்த பூஜைகள் முடிந்தபிறகு 5.45 மணிக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனைப்போலவே காலை 7 மணி முதல் 9 மணி வரை உஷ பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடைபெறும் சமயத்தில் சாமியை பக்தர்கள் எவரும் தரிசனம் செய்ய முடியாது.
சிறப்பு பூஜை நடத்துபவர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். தற்போது பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், பக்தர்கள் வழக்கமான மேம்பாலம் வழியாக செல்ல தேவையில்லை. பதினெட்டாம்படி வழியாக ஏறி வலதுபக்கம் வழியாக சென்று தனிமனித இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்யலாம். மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 6 மணி முதல் 8 மணி வரை படிபூஜை உட்பட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. அதுமட்டுமன்றி இரவு 8 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது” என்று தெரிவித்துள்ளது.