தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது பற்றி டிசம்பரில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏழு மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு அரசு திட்டம் தீட்டியது. ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக குறைந்த அளவிலான பாடங்கள் மட்டும் நடத்தப்படுவதால் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதனால் மீதம் இருக்கின்ற 60 சதவீத பாடப் பகுதியிலிருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது பற்றி வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.