நடிகர் விஜயகுமார் முன்னேற்பாடாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதியில் நான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கடந்த 2015ம் வருடம் டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்கள் பகுதியலிருந்து அடையாறு வரை உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அதோடு மட்டுமல்லாமல் உயிர் சேதமும் ஏற்பட்டது. அதேபோல் இந்த வருடமும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டி வருகிறது.
இந்த நிலமை தொடர்ந்து நீடிக்குமேயானால் 2015-ம் வருடத்தைப்போல மோசமான நிலைமை உருவாகும். எனவே தாங்கள் இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக ஏரியில் உள்ள நீரை அளவுடன் திறந்துவிட உத்தரவிட்டால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பாடாமல் தடுக்க முடியும்.
எனவே தயவு செய்து இதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களால் இதை கண்டிப்பாக செய்ய முடியும் என நான் நம்புகிறேன். கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து தமிழக மக்களை எவ்வாறு காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வாறே கரையோரம் வசிக்கும் நம் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.