Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையை நீதிமன்றமே திறக்கும்… தமிழக அரசுக்கு எச்சரிக்கை…!!!

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றமே உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |