பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 70 சதவீதத்தை ஆண்டு கண்டனமாக நிர்ணயித்து அதில் 40சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் அடுத்த கட்டமாக கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். 40 சதவீத கட்டணத்தை வசூல் செய்து விட்டதால், அடுத்த கட்ட 35 சதவீத தொகையை வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் வசூல் செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அனுமதி கேட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது ? என்று அரசிடம் கேட்டபோது, பள்ளி திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற விவரத்தை தமிழக அரசு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து முதல்கட்டமாக வசூலிக்கப்பட்ட 40 சதவீத கட்டணத்தை விட கூடுதல் கட்டணமாக வசூலித்த பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 27ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்திருக்கிறார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.