லஷ்மி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் எவரும் பயப்பட வேண்டாம் என்று வங்கி நிர்வாகி மனோகரன் தெரிவித்துள்ளார்.
லஷ்மி விலாஸ் வங்கி அபார வளர்ச்சி பெற்ற லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதில் நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகி உள்ளது. வங்கி தனது செயற்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருந்தாலும் அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
அதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேல் எடுக்க முடியாது என்று ஆர்பிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு டிசம்பர் 16ஆம் தேதி வரையில் தொடரும் என்று அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் லஷ்மி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடையத் தேவையில்லை என வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார். டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் 2020 ஆம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.