திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக துணைத் தலைவர் திரு. வி. சக்திவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் திரு. எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபத் திருவிழாவை தவிர்த்து மற்ற நாட்களில் ஐந்தாயிரம் பேரை அனுமதிப்பதாக கூறும்போது உற்சவ மூர்த்திகள் ஊர்வலமும் தேர்த் திருவிழாவையும் மாடவீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபத் திருவிழாவையொட்டி 29ஆம் தேதி தவிர பிற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 800 பக்தர்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும். கொரோனா அச்சம் காரணமாக உற்சவ மூர்த்திகளும் தேர் திருவிழாவும் கோவில் வளாகத்திற்குள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
உற்சவர் ஊர்வலத்தையும் தேர்த் திருவிழாவையும் மாடவீதிகளில் நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் காவல்துறை கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் இது சம்பந்தமாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.