சென்னை மெரினாவில் பொது மக்களை அனுமதிப்பது குறித்த டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்தனர். 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் லுக் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.