திருவண்ணாமலை தீப திருவிழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தெரிவித்தது.
அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பாக, வருகின்ற 29ஆம் தேதி தீபத் திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதற்கு முந்தைய நாளான 28ம் தேதியும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது. மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 800 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
அவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக தேர் திருவிழா கோவில் வளாகத்துக்குள் மட்டுமே நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கு நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.