போலியாக சோனி பெயரில் குறைந்த விலைக்கு டிவி விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நந்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் குறைந்த விலையில் சோனி டிவி கிடைப்பதாக பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் அமைந்துள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இருந்து 32 இன்ச் சோனி டிவியை 9 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். பில் வாங்காமல் சென்ற அவர் வீட்டிற்கு சென்று டிவியை ஆன் செய்த போது அது வேலை செய்யவில்லை. இதுகுறித்து டிவி வாங்கிய நிறுவனத்திடம் சவுக்கத்அலி கேட்டுள்ளார்.
சோனி நிறுவனத்திற்கு சென்று சர்வீஸ் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர். இதனால் டிவியை சர்வீஸ் சென்டருக்கு சவுக்கத் அலி கொண்டு சென்ற போது அவர்கள் இது தங்கள் கம்பெனி டிவி இல்லை என்றும் போலியாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பாலக்கரை காவல் நிலையத்தில் சவுக்கத்அலி புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார்.
அப்போது எலக்ட்ரானிக்ஸ் கடையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து டிவிகளும் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து 153 டிவிகளை பறிமுதல் செய்த போலீசார் கடை வைத்திருந்த முகமது பைசல், நிஜாமுதீன், சரவணன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட டிவிகள் குறித்து சோனி நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்.