ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக 1,838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட கூடாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “மருத்துவக் கல்லூரிஅமைக்கப்பட உள்ள வனப் பகுதியில் இருக்கின்ற 25 ஏக்கர் நிலத்தில் உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப்படும். அந்த நிலத்தில் மண் சார்ந்த மரங்கள் எதுவும் கிடையாது. வெளிநாட்டு மரங்களை உள்ளன. அங்கு உள்ள 1838 மரங்களில் 90% தைல மரங்கள் தான் உள்ளன.
அங்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மரக்கன்றுகளை நடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார். இதனையடுத்து மரங்களை வெட்டுவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். அதன் பிறகு நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு மரங்களை ஏலம் விட வேண்டும் என்றும் மரங்களை வெட்டியது தொடர்பான புகைப்பட விவரங்களோடு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.