இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடர் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2ஆம் தேதியோடு ஒருநாள் சர்வதேச போட்டி நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தொடங்கும் டி20 தொடர் டிசம்பர் 4 முதல் 8 வரை நடைபெறுகிறது.இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது.
இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறப்பதால் முதல் டெஸ்ட் முடிந்த பிறகு நாடு திரும்புவார். இந்த நிலையில்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோஹ்லி 3 போட்டிகளில் விளையாடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் கிளேன் மெக்ராத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிளேன் மெக்ராத் கூறுகையில், விராட் கோஹ்லி ஒரு திறமை வாய்ந்த வீரர். அவர் 4 டெஸ்டில் 3 போட்டியில் ஆடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். கோஹ்லி 2 வீரர்களுக்கு இணையானவர். ஒன்று சக வீரர் மற்றொன்று அணியின் கேப்டன். அவர் ஆடுகளத்தில் மிகுந்த ஆக்ரோசத்துடன் செயல்படக்கூடியவர். இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த விரும்பும். வார்னர், ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும்.
முதல் டெஸ்ட் போட்டியே சுவாரசியமானது. ஏனென்றால் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இதுவரை பகல்-இரவு டெஸ்டில் விளையாடியது கிடையாது. சூரியன் மறைந்த பிறகு இரவு நேரத்தில் வேகப்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். விராட் கோஹ்லி இல்லா விட்டாலும் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது என தெரிவித்தார்.