பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின இளம்பெண் உயிரிழந்ததையடுத்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜஹாங்கீராபாத் மாவட்டத்தை அடுத்த நாக்லா கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த கும்பலால் கடந்த வாரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கும்பலை கைது செய்வதில் அரசு மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்கு பின்னணியில் காவல்துறை வட்டார அலுவலர் அதுல் சௌபே இருப்பதாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பட்டியல் இனத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நீதி கேட்டு அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமைக்கு நடைபெற்ற போராட்டங்களை போல நாக்லா பெண்ணுக்கும் ஆதரவாக போராட்டம் பெரிதாக ஏற்படாமல் இருக்க, போராட்டத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் இரவோடு இரவாக எரிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் கிராம மக்களின் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் அதுல் சௌபே பணியில் இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.