காஞ்சிபுரம், காமாட்சி காலனி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவரது 15 வயது மகன் சந்தோஷ், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில், சந்தோஷ் அலறல் கேட்டு, துாங்கி கொண்டிருந்த குடும்பத்தினர், வெளியில் வர முயற்சித்தனர். வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அவர்களால் வர முடியவில்லை.
பின்பக்க கதவு வழியாக சென்றவர்கள், கழிப்பறையில் எரிந்து கொண்டிருந்த சந்தோஷை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், தீவிர சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் சந்தோஷ் இறந்தார். சம்பவத்தின் போது கழிப்பறை உட்புறம் தாழிடப்பட்டிருந்ததாக கூறுகின்றனர். சந்தோஷுக்கு மது, கஞ்சா போன்ற பழக்கம் இருந்துள்ளது. பல வழக்குகளும் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
தீபாவளிக்கு முன், சந்தோசுக்கும், அதே பகுதியில் உள்ள ஒருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.