ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு மக்களை கதிகலங்க வைத்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தலைநகரம் படத்தில் நடிகர் வடிவேலு பேசும் நானும் ரவுடி தான் என்ற வசனம் நகைச்சுவையாக பரிணமித்தது. அதேபோல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களை ரவுடியாகவும் ஏரியா தாதாவாகவும் காட்டிக்கொள்ள கையாளும் யுத்திகள் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே அச்சம் உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அடிதடி ரகளை என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
தங்களை ரவுடியாகவும் ஏரியா தாதாவாகவும் காட்டிக்கொள்ள பல்வேறு வன்முறை சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட தொடங்கினார். தங்கள் பகுதியில் சிறு சிறு பிரச்சனை என்றாலும் அதில் தொடர்புடைய நபர்களை குறி வைத்து கொடூரமாக தாக்குவது கட்டப் பஞ்சாயத்துகள் செய்வது என அவர்களின் அத்துமீறல் எல்லையைக் கடந்தது. இவ்வாறு அத்துமீறலில் ஈடுபட்டு அந்த இளைஞர்கள் தங்களின் அராஜகத்தை வீடியோவாக பதிவு செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விளம்பரம் தேடிக் கொண்டனர்.
இளைஞர்களின் சமூக விரோத செயல்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் மாவட்ட போலீசார் களத்தில் இறங்கினர். சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பதிவுகளையும் வைத்து வன்முறையாளர்களை அடையாளம் கண்ட போலீசார் ராஜசேகர ரெட்டி என்ற இளைஞரை கைது செய்ததுடன் மற்றவர்களை தேடி வருகின்றனர்.