நெல்லை ரயில் நிலையத்தில் செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கின்ற நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இளநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு 15 வயதுடைய ஜானேஸ்வர் என்ற மகன் இருக்கிறார். அவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது 4வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்குவதை வேடிக்கை பார்த்துள்ளார். அவர் திடீரென அந்த ரயில் என்ஜின் மீது ஏறி தனது செல்போனில் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ரயில் என்ஜின் மீது செல்லும் உயரழுத்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதால் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.