ஆவினில் ஓராண்டாக பால் துர்நாற்றம் பிரச்னை அடிக்கடி தலை துாக்குகிறது. நிரந்தர தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ‘கோட்டை’ விடுகின்றனர். இதற்கு காரணம், பால் பதப்படுத்தும் யூனிட் பகுதிக்குள் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு செல்வதில்லை. தவிர லேப், தரக்கட்டுப்பாடு, பைப் லைன், சைலோ (பால் கலன்கள்) பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பால் தொழில் நுட்பம் தெரிந்த நிரந்தர ஊழியர்கள் இல்லை. பத்து மாதங்களாக மஸ்தூர் பிரிவு முதல் மேலாளர் வரை 250-க்கும் மேல் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஷயம் தெரியாத ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்லாததால் பால் பதப்படுத்துதலில் அடிக்கடி பிரச்னை எழுகிறது. அதிகாரிகளின் அஜாக்கிரதை மக்களையும் பாதிக்கிறது. இது குறித்து அவர்கள் கூறியதாவது, “கூடுதல் கவனம் தேவை: ஆறுமுகம், கார் டிரைவர், மேலமடை: 15 ஆண்டுகளாக ஆவின் பால் வாங்குகிறேன். தற்போது தான் துர்நாற்றம் பிரச்னை ஏற்படுகிறது. காய்ச்சும் போது கெட்ட நாற்றம் வருகிறது.
முகவர்களிடம் தொடர்ந்து கூறுகிறோம். மாற்றம் என்ற பெயரில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் பாக்கெட்டுகளை நிறுத்தி விட்டனர். பால் என்பது மக்கள் உடல் நலம் சார்ந்த பிரச்னை. ஆவின் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இமேஜ் குறைகிறது:சாராள் ரூபி, எஸ்.எஸ்.காலனி: அவ்வப்போது ஆவின் பாக்கெட் பாலை காய்ச்சும்போது திரிந்து விடுகிறது.குழந்தைகள் வாந்தி எடுத்து விடுகின்றனர். தரமற்ற பாலை ஏன் வாங்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது. பசும்பாலுக்கு இணையாக இருந்த ஆவின் பால் இமேஜ் தற்போது குறைகிறது. எதனால் என தெரியவில்லை.
அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்பிரச்னையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நஷ்டத்தில் ஆவின்:கணேசன், ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர், மானகிரி: 35 ஆண்டுகள் பணியாற்றினேன். இதுவரை இருந்த பொது மேலாளர்கள், நிர்வாகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் யூனிட் ஆய்விலும் காட்டினர். தற்போது யூனிட்டிற்குள் அதிகாரிகள் செல்வது அரிதாகி விட்டது. விஷயம் தெரிந்த அதிகாரிகளை மாற்றி விட்டு தற்காலிக ஊழியர்களை யூனிட்டில் வேலை செய்ய சொல்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு பின் பல கோடி டெபாசிட் எடுக்கப்பட்டு மதுரை நஷ்டத்திற்கு சென்றுவிட்டது மன வேதனையாக உள்ளது. இவ்வாறு கூறினர்.
இப்பிரச்னை குறித்து ஆவின் பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யாவிடம் கருத்து கேட்க பல முறை முயன்றும் அலைபேசியை அவர் எடுக்கவில்லை.36 ஆயிரம் லிட்., பால் வீணடிக்கப்பட்டதா:இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட பார் துர்நாற்றம் பிரச்னையால் பதப்படுத்தி சைலோக்களில் பால் கலன்கள் வைக்கப்பட்ட 36 ஆயிரம் லிட்., பாலை ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் உத்தரவுபடி ஈரோடு ஆவின் தரக்கட்டுப்பாட்டு குழு ஆய்வு செய்தது. அந்த பால் பயன்படுத்த தகுந்தது அல்ல என அக்குழு தெரிவித்தது. இதனால் அவை பயன்படுத்தப்படவில்லை. பதப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்., விலை ரூ.45 என்பது குறிப்பிடத்தக்கது.