சென்னையில் தூக்க கலக்கத்தில் வெளியே வந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த வேங்கை ராஜன் (27) என்பவர் தற்போது சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள புழுதிவாக்கம் ராம் நகர் 11வது தெருவில் வசித்துவருகிறார். அவர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மதுரையை சேர்ந்த நண்பர்கள் 13 பெயர் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேங்கை ராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆகியது.
இதனையடுத்து தனது மனைவியுடன் தலை தீபாவளிக்கு மதுரை சென்று விட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். நேற்று அதிகாலையில் அவருடன் தங்கியிருந்த அருண் என்ற நண்பர் கதவை தட்டியுள்ளார். அதனால் தூக்க கலக்கத்தில் இருந்த வேங்கை ராஜன் வெளியே வந்து கதவை திறந்து விட்டார். அதன் பிறகு காலையில் மற்றொரு நண்பர் குமரேசன் ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருக்கின்ற காலி மைதானத்தில் வேங்கை ராஜன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வேங்கை ராஜன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில், தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்த வேங்கை ராஜன், வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.