தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 66,115 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,029 ஆண்கள், 678 பெண்கள் என மொத்தம் 1,707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 58 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 316 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 471 பேரும், கோவையில் 149 பேரும், திருவள்ளூரில் 138 பேரும், செங்கல்பட்டில் 119 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 2 பேர் என 5 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போதுவரை 1,10,49,131 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 7,64,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,62,186 ஆண்களும், 3,02,770 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 33 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 26,961 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 97093 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், மதுரை, சேலம், திருவள்ளூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூரில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 11,550 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 2 ,251 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 593 பேரும், கோவையில் 183 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும், சேலத்தில் 106 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7,39,532 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 13,907 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 925 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 990 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 351 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் 66 அரசு மருத்துவமனை மையங்கள், 147 தனியார் மருத்துவமனை மையங்கள் என மொத்தம் 147 மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.