கொரோனா ஆபத்து காலத்தில் ஊழியர்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.
சாக்ரமெண்டோ; உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த ஆபத்துக்கு மத்தியிலும், உலகமெங்கும் உள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்களை கட்டாயம் பணிக்கு வருமாறு அந்நிறுவனம் அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய லாப நோக்கத்திற்காக இது மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து தொலைதூரத்தில் உள்ளவர்கள் வேலை செய்ய ஏற்ற வகையில் பேஸ்புக் நிறுவனம் மாற்றங்களை செய்ய வேண்டும்.
மேலும் ஆபத்து கால அலவன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிறுவனத்தின் இலாப நோக்கத்திற்காக ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் தியாகம் செய்வது என்பது ஒழுக்கக்கேடான செயல் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டிலிருந்து தான் பெரும்பாலான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “வெளிப்படையான பேச்சுவார்த்தையில் நாங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளோம். இதுபோன்ற விவாதங்கள் நேர்மையாக இருக்கவேண்டும். மேலும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தான் வேலை செய்து வருகிறார்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் இப்படியே தொடர்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.