சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸுடன் இன்று உலகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் ஆங்காங்கே இதனுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் லஹுவால் என்ற மாவட்டம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் வெளியூர் மக்கள் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள ஸ்பிடி பள்ளத்தாக்கின் அருகில் உள்ள தொரங் என்னும் கிராமத்தில் ஒரே ஒரு நபரைத் தவிர, அனைத்து மக்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் வசிக்கக்கூடிய 42 பேரிடம் கொரோனா பரி சோதனை மேற்கொண்டதில், 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதற்கு காரணமாக சில நாட்களுக்கு முன்பாக அக்கிராம மக்கள் ஒன்றாக கூடி வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தை சுற்றி இருக்கக் கூடிய பிற மக்களும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.