Categories
மாநில செய்திகள்

அமித்ஷா இன்று சென்னை வருகை – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா சென்னை பழைய விமான நிலையம் ஆறாவது கேட் வழியாக வெளியே செல்கிறார்.

இதனையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கார வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்று (நவ.21) காலை 10 30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவரை அவருக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் நீர்த்தேக்கம் திட்டத்தினை காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். அதேபோன்று மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை தொடங்கிவைப்பார்.

அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையம், எம்ஆர்சி நகர் நட்சத்திர விடுதி வளாகம் மற்றும் கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மொத்தம் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னை விமான நிலையம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தமிழ்நாடு வரும் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில். “நாளை (அதாவது இன்று) தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |