புதுச்சேரி ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 14-ந்தேதி மாலை வினாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 18-ந் தேதி இரவு யானை முகன் சம்ஹாரம் நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் இரவு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று(சனிக்கிழமை) காலை 7.45 மணிக்கு திருக்கல்யாணமும், வருகிற 24-ந் தேதி கடல் தீர்த்தவாரியும், 28-ந் தேதி முத்து பல்லக்கும், அடுத்த மாதம்(டிசம்பர்) 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
வில்லியனூரில் மிகவும் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி சன்னதியில் கந்தசஷ்டி விழாவையொட்டி சாமிக்கும், அம்பாளுக்கும் தினமும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கரிக்கலாம்பாக்கம் வள்ளி தெய்வானை சமேத குமரேஸ்வரன் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவில், முதலியார்பேட்டை வெள்ளாளர் வீதியில் உள்ள முத்துகுமரன் கோவில், நைனார் மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில், காராமணி குப்பம் முருகன்கோவில், கதிர்காமம் முருகன் கோவில், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோவில், அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவில் உள்பட புதுவையில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் எளிய முறையில் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.