தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து மத்திய அரசோடு கூட்டு சேர்ந்தால் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி என்பது தமிழர்களுக்கு தொடர்ந்து எல்லா வகைகளும் துரோகம் செய்கிற கூட்டணி.
மத்திய அரசு தமிழ் நாட்டுக்காரர்களுக்கு வேலையை கூட கொடுக்காமல் படித்த தமிழ்நாட்டு இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் கூட தமிழக இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை. தமிழ்நாட்டின் கல்வி முறையை மாற்றுகின்ற, தமிழ்நாட்டுக்கு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தை மாற்றம் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்த மத்திய அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள், மறக்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட கட்சியோடு கூட்டு சேர்ந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள நினைக்கின்ற ஒரு மாநில அரசு இருக்கிறது. எனவே அவர்கள் தமிழ்நாட்டுக்கு நேர் விரோதிகளாக இருக்கிறவர். அவர்களோடு தங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டணி சேர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, மத்திய அரசோடு கூட்டு சேர்ந்தால் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அவர் தெரிவித்தார்.