அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலரும் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும் பைடன் – கமலா ஹாரிஸ் பரப்புரை குழுவில் மூத்த கொள்கை ஆலோசகராகவும் இருந்ததார்.
மத்திய அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான இல்லினாய்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் மாலா அடிகா. இவர் கிரின்னல் கல்லூரி, மினசோட்டா பொது சுகாதாரப் பள்ளி, சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.
தொழில் ரீதியாக வழக்கறிஞராக இவர், சிகாகோவில் உள்ள பிரபல சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அதன் பின்னர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் உலகளாவிய மகளிர் பிரச்னைகள் தொடர்பான மாநில அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரின் மூத்த ஆலோசகராகவும் அடிகா பணியாற்றினார்.
மாலா அடிகாவைத் தவிர, கேத்தி ரஸ்ஸல், லூயிசா டெரெல், கார்லோஸ் எலிசண்டோ ஆகிய மூன்று நபர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.