கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது
ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 24 பந்துகளில் 55* ரன்களும் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்), நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 48 ரன்களும் (4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்தனர். மேலும் மயங் அகர்வால் 36 ரன்களும், மன்தீப் சிங் 25 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 184 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். கிறிஸ் லின் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். ஷுப்மன் கில் அவருக்கு கம்பேனி கொடுக்க லின் அதிரடியாக விளையாடினார்.
அதன் பின் லின் 22 பந்துகளில் 46 ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்ஸர் ) விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த உத்தப்பா 22 ரன்கள் எடுத்தார். அதன் பின் ஆண்ட்ரே ரஸெல் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த கில் அரைசதம் அடித்தார். ரஸெல் அதிரடியாக 24 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் தினேஷ் கார்த்திக்கும், கில்லும் இணைந்தனர்.
18வது ஓவரின் கடைசி 2 பந்தில் தினேஷ் கார்த்திக் 6, 4 அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் கொல்கத்தா அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 49 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 65 ரன்களும், தினேஷ் கார்த்திக் 21 (9) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் மொஹம்மது சமி, ஆர். அஷ்வின், ஆண்ட்ரு டை ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.