தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கட்டாயம் தொடரும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார். அதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்கள் அதனைப்போலவே சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தமிழ், தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கும் ஒரே கட்சி பாஜக ஆட்சிதான். மேலும் தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஆக இந்தியாவை திணிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளை எல்லாம் வடமாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டை தரவேண்டிய ஜிஎஸ்டி வரி தொகையை தர மறுப்பது. தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது என்று தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவை பாஜக வுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்த துரோகத்தை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டின் நலனை அடகு வைத்தது மட்டுமல்லாமல் தங்களது கட்சியையும் பாஜகவுக்கு அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி” என்று அவர் கூறியுள்ளார்.