ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளதால், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு, ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஓய்வளிக்கப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது குழந்தை பிறப்பு காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரோஹித் சர்மா,”நான் அனைவரிடத்திலும் சொல்வது ஒன்று மட்டும் தான். என்னை எந்த வரிசையில் களமிறக்கினாலும் விளையாட நான் தயாராகவுள்ளேன். ஆனால் தொடக்க வீரராக இருக்கும் என்னை அவர்கள் வேறு இடத்தில் களமிறக்குவார்களா? என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி மிகவும் சவால் நிறைந்தாக இருக்கும். ஏனெனில் அவர்களிடம் ஹசில்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணிகெதிராக விளையாடுவதை நான் எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்தார்.