தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் இந்த தேர்தலில் துணைத்தலைவர் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வாக்களித்தனர். இந்நிலையில் இன்று காலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைகளின் முடிவில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டி .ராஜேந்தர் 338 வாக்குகள் மற்றும் தேனப்பன் 87 வாக்குகள் பெற்று தோல்வியடைந்ததுள்ளனர்.