நபர் ஒருவர் தனது பயணத்திற்கான அனுமதி பத்திரத்தில் எழுதியிருந்த காரணத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரான்சில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவை மற்றும் வேலை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். ஆனால் அதற்கு உரிய சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் தான் வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று Lanion நகரில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கார் ஒன்றின் பின்னால் ஒளிந்து இருப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் சென்று வெளியில் செல்வதற்கான அனுமதி பத்திரம் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தன்னுடைய கையிலிருந்த அனுமதி பத்திரத்தை கொடுத்துள்ளார். அந்த அனுமதிப் பத்திரத்தில் அவர் எழுதியிருந்த காரணம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அனுமதிப் பத்திரத்தில் அவர் வெளியில் செல்வதற்கான காரணம், அந்த பகுதியில் ஒருவரை தாக்குவதற்கு செல்வதாக எழுதி இருந்துள்ளார்.
இதை வாசித்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் அனுமதிப் பத்திரத்தில் அவரின் உண்மையான பெயர், முகவரி மற்றும் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் அனைத்தையும் சரியாக எழுதி இருந்துள்ளார். மேற்கொண்டு அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் அவர் அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காரணம் உண்மையானதுதான் எனவும் அவர் அங்கிருந்து வரும் ஒரு நபரைத தாக்கவே தான் அங்கு காத்திருப்பதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மேலும் அவர் கத்தி வைத்திருந்ததுடன் மதுவும் அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு அவருக்கு 135 யூரோ அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர். தற்போது அவர் விடுவிக்கப்பட்டாலும்விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.