தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை விதித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடந்த சில மாதங்களாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதனை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கடந்த 20ஆம் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தார்.
இந்நிலையில் ஆளுநரின் அறிவிப்பு நேற்று தமிழக அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10 ஆயிரம் அபராதமும் இரண்டு வருடம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.