புயல் தொடர்பாக பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் :
புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம்.
குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுதுபார்த்து வைத்திருக்க வேண்டும்.
வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.
அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்கவேண்டும்.
பாட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழவகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மூக்குக் கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாது அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாககட்டி வைக்க வேண்டும்.
புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடக்கும் போது வாகனத்தில் பயணிக்க வேண்டாம்.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடிரென்று குறையும். அதனால் புயல் கரையை கடந்து விட்டதாக எண்ண வேண்டாம். மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். படகுகள் அனைத்தும் தரைதட்டாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும்.
திறந்தவெளியில் இருப்பவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருக்க வேண்டும்.
பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதன்படி செயல்படலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள :
மாநில எண் :1070
மாவட்ட எண்: 1077
-தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்