தமிழகத்தில் புயல் காரணமாக 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன், காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் உள்ளிட்ட 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் இன்று 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் பழவேற்காடு முதல் கோடிக்கரை வரையிலான வட கடலோர மாவட்டங்கள் மற்றும் குலச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.