Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிவர் புயலின் வேகம் அதிகரிப்பு – சென்னைக்கு ஆபத்தா?

நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலின் கிழக்கே சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு அருகே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் நேற்று மாலை இது தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் மழை படிப்படியாக உயரும் என்றும் கிழக்கு கடற்கரை சாலையில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையை கடக்கும் வரை கல்பாக்கம் அணுஉலை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் பகுதியை ஒட்டிய கடலூர் துறைமுகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அங்கு 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே நிவர் புயலை கரையை கடக்க உள்ள புதுச்சேரி துறைமுகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதே போல் நாகை , காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |