தமிழ்நாட்டை தாக்கும் பல்வேறு புயல்களிலிருந்து தூத்துக்குடி மாவட்ட கரையோர பகுதிகளை இந்த நாடு தான் பாதுகாப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறு இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நீலம், தானே, வார்தா, ஒக்கி, காஜா என அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களில் குறிவைத்து தாக்குகின்றன. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டமாக நாம் இருந்தாலும் நாம் இருக்கும் இடம் இயற்கையிலேயே பாதுகாப்பு மிகுந்தது.
தூத்துக்குடியை காக்கும் இலங்கை:
ஆழியின் ஆர்ப்பரிப்பில் இருந்து நம் தூத்துக்குடியை காப்பது வேறுயாருமில்லை நம் இலங்கை தான். வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் தென் தமிழக கடற்பகுதிக்கு நேர் எதிரில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. இதனால் வங்கக் கடல் பகுதி பிளவுபட்டு மன்னார்வளைகுடா என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. அதன் கரையோரத்தில் தான் நெல்லை, தூத்துக்குடியின் கரையோர பகுதிகள் அமைந்துள்ளன. வங்கக்கடலில் சீற்றத்தை விட இந்தப் பகுதிகளில் கடலின் சீற்றம் குறைவாகவே இருக்கும்.
இதனை ராமேஸ்வரத்திலும், தூத்துக்குடியிலும் நாம் உணரலாம். இப்படி கடலுக்கு நடுவே இலங்கை அமைந்துள்ளதால் எந்த புயலும் நம் தூத்துக்குடியை நேரடியாக தாக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதனை சுனாமி வந்த போதும் நாம் உணர்ந்தோம்.! கடந்த 2004ஆம் ஆண்டில் இந்தியாவின் சோழமண்டல கடற்கரை முழுவதும் ஆழிப்பேரலையால் ஆவேச தாக்குதலுக்கு உள்ளான போது இங்கே நம் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி நம்மைக் காப்பாற்றியது.
இது திருச்செந்தூர் முருகனின் அருளால் தான் நடந்தது என்று அச்சமயம் பலராலும் பேசப்பட்டு வந்தது. அது ஒருபக்கம் உண்மை என்றாலும், நம் தூத்துக்குடி கடலோர பகுதிக்கு நேரெதிரே இலங்கை அமைந்துள்ளது கடவுள் நமக்கு அளித்துள்ள வரபிரசாதம் என்றே கூறலாம். இலங்கை இவ்வாறு அமைந்ததே தூத்துக்குடியை எந்த புயலாலும் ஒன்றும் செய்ய முடியாததற்கு காரணம். இதுவே அறிவியல் பூர்வமான உண்மையும் ஆகும்.