சென்னையில் கொட்டும் மழையிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர் மழையால் எழும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஸ்டாலின் உடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். மழைநீர் சூழ்ந்த சாலைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை பார்வையிட்டு ஸ்டாலின் மீட்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என கேட்டறிந்தார். கேட்பாரின்றி கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் திமுக தொண்டர்கள் இறங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஸ்டாலின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார். கொட்டும் மழையிலும் நடந்தே சென்ற அவர் மழையில் செல்ல வழியில்லாமல் உள்ள பகுதிகளில் கட்டமைப்பை ஆய்வு செய்தார். எழும்பூரை தொடர்ந்து திருவிக நகர் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.