விவசாயி ஒருவர் நிவர் புயலிடமிருந்து பாதுகாக்க தன் வீட்டின் ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ள காட்சி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மேலும் அதி வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் புயலில் இருந்து தப்பிக்கவும், தங்களது உரிமைகளை பாதுகாக்கவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியான சேர்ந்தகுமார் என்பவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ளார்.
ஏனெனில் கஜா புயல் வந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது. அதே போன்று தற்போது நிவர் புயலால் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடற்கரையோரம் அமைந்துள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க வீட்டின் மேல் வலை விரித்தும், வீட்டின் அருகில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.